• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பல்லாவரத்தில் மாத சீட்டு மோசடி புகார்..,

ByPrabhu Sekar

Aug 31, 2026

பல்லாவரத்தில் மாத ஏல சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படும் அதிமுக மகளிரணி நிர்வாகி ஒருவர், சீட்டு முடிந்த பிறகும் பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை அடுத்த பல்லாவரம் சிவசக்தி நகர் பகுதியில் வசித்து வரும் விஜயலஷ்மி என்ற அதிமுக மகளிரணி நிர்வாகி மாத ஏல சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் திரிசூலம் முக்கனியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மகேஷ்வரி உள்ளிட்ட பலர் சீட்டில் இணைந்து பணம் செலுத்தி வந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், தலா 2 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை சீட்டில் முதலீடு செய்துள்ளதாகவும், சீட்டு காலம் முடிந்த பிறகும் பணத்தை வழங்காமல் விஜயலஷ்மி இழுத்தடித்து வருவதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும், 25 பேர் இணைந்த சீட்டு திட்டம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், உண்மையில் 6 பேரை மட்டும் சேர்த்து சீட்டு நடத்தப்பட்டதாகவும், பணம் வசூலிக்க வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் ஏலத் தொகை மற்றும் கட்ட வேண்டிய தொகை குறித்து தகவல்கள் பகிரப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

அந்த தகவல்களின் அடிப்படையில் ஜி-பே உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் பணம் செலுத்தியதாக கூறிய அவர்கள், பணம் கேட்டபோது வாட்ஸ்அப் குழுவிலிருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினர்.

இந்த விவகாரம் தொடர்பாக மூன்று மாதங்களுக்கு முன்பே பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், நடவடிக்கை எடுக்கப்படாததால் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் புகார் அனுப்பியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

முதலமைச்சர் தனிப்பிரிவு புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், பல்லாவரம் காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரித்தபோது, “இன்று போய் நாளை மாலை 5 மணிக்கு வாருங்கள்” என ஒரு வாரமாக அலைக்கழிக்கப்படுவதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனவே, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, தங்களது பணத்தை மீட்டுத் தர பல்லாவரம் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையாளர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.