பான் இந்தியா மூவி என்றால் என்னவென்றே எனக்குத் தெரியவில்லை. படம் நன்றாக இருந்தால் மக்கள் அனைத்து மொழித் திரைப்படங்களையும் பார்ப்பார்கள்” என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் சமந்தா, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் அண்மையில் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து படத்தின் நாயகன் விஜய் சேதுபதி சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார். அதில் விஜய் சேதுபதி கூறியதாவது, ‘படத்தின் வெற்றி முழுக்க விக்னேஷ் சிவனைத்தான் போய் சேரும். இப்படியான கதையை எழுதி அதனை திரைப்படமாக்குவது பெரிய கஷ்டம். அதனால் இந்த வெற்றி விக்னேஷ் சிவனுக்குத் தான் சேரும் எனக் கூறுகிறேன். பான் இந்தியா மூவி என்றால் என்னவென்றே எனக்குத் தெரியவில்லை. மக்கள் நன்றாக இருந்தால் அனைத்து மொழி படங்களையும் பார்ப்பார்கள். எடுத்துக்காட்டுக்கு யூ டியூப்பை பாருங்கள்… மொழியாக்கம் செய்யப்பட்ட படத்தை பெரிய எண்ணிக்கையில் பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள்.
டப்பிங் செய்யப்பட்ட அனைத்து படங்களையும் மக்கள் பார்க்கிறார்கள். அப்படியென்றால் அனைத்து படங்களையும் பான் இந்தியா படங்கள் என்று கூறலாம். படம் நன்றாக இருந்தால் அனைவரும் பார்ப்பார்கள். அது பான் இந்தியா மட்டுமல்ல பான் வேர்ல்ட் என்றே கூறலாம்’ என்று தெரிவித்தார்.