
புதுச்சேரி போக்குவரத்துத்துறை சார்பில் 900 கல்வி நிறுவனங்களை சேர்ந்த பேருந்துகள் மற்றும் மாணவர்கள் சிறப்பு பேருந்துகள் என 1100 பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று ஆய்வு செய்யப்பட்டு அடையாளமாக வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன.
புதுச்சேரியில் வருகிற இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவ, மாணவியர் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும், மோட்டார் வாகன சட்டம் மற்றும் உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தும் நோக்கிலும், புதுச்சேரி பகுதிக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களின் வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாம் 31-ம் தேதி முதல் 01-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மேட்டுப்பாளையம் சரக்கு ஊர்தி முனையத்தில் இன்று தொடங்கிய வாகன சிறப்பு ஆய்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு, 900 கல்வி நிறுவனங்களை சார்ந்த சுமார் 1100 வாகனங்களை ஆய்வு செய்தார்.
சிறப்பு ஆய்வில் கலந்து கொண்ட வாகனங்களுக்கு, ஆய்வு செய்யப்பட்டதன் அடையாளமாக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
இதற்கென போக்குவரத்து துறையில் வாகன ஆய்வாளர்கள், உதவி வாகன ஆய்வாளர்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு தீயணைப்பு துறை மூலமாக தீ அணைக்கும் கருவி பயன்படுத்தப்படும் செயல்முறை விளக்கத்தை இந்த சிறப்பு முகாமில் செய்தி காண்பிக்கப்பட்டது.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், ..
அனைத்து கல்வி நிறுவனங்கள் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இதில் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் சரியாக இருக்கின்றதா வாகனங்களில் படிக்கட்டுகள், பிரேக் சிஸ்டம், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை சரி செய்யப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆய்வு செய்யப்படும் பேருந்துகளில் ஏதாவது குறைகள் இருந்தால் அந்த வாகனத்தின் ரெனிவல் ரத்து செய்யப்பட்டு, அந்த குறைகளை சரி செய்த பின்பு மீண்டும் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்தார்.

