• Fri. Mar 31st, 2023

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கோவையில் தடை

சென்னையைத் தொடர்ந்து கோவையிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ஒமிக்ரான் பரவல் அச்சம் காரணமாக இன்று இரவு சென்னை கடற்கரையில் மக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று சென்னையிலுள்ள கிளப்கள், ஹோட்டல்கள் போன்றவற்றில் நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 12 மணிக்கு மேல் சென்னையில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவையிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா பெருந்தொற்று பரவும் அபாயம் இருப்பதால், கோவை மாவட்டத்தில் சாலைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், இதுபோன்ற இதர இடங்களில் இன்றிரவு பொதுவாக நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் மக்கள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். கூட்டம் கூடி புத்தாண்டு கொண்டாட்டங்கள் செய்யும்பட்சத்தில் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள, கொரோனா தொற்றானது அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் சில வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் மூலம் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றானது தற்போது பரவி வருகின்ற சூழ்நிலையில் நோய் தடுப்புப் பணிகளை மேலும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

அதனால் கோவையில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் இன்றிரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை.

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலைக் கருத்தில்கொண்டு பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று மதுரையிலும் புத்தாண்டை பொது இடங்களில் கேக் வெட்டி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. சைலன்சரை நீக்கிவிட்டு அதிக ஒலியுடனும், வேகமாகவும் இருசக்கர வாகனங்களை இயக்கினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கன்னியாகுமரியிலும் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *