ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தின், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க அமைப்பின் இரண்டாவது மாநாடு என். அப்பாஸ் தலைமையில் மம்சாபுரத்தில் நடைபெற்றது. பெருமாள் மற்றும் கே. கணேசன் முன்னிலை வகித்தார்கள்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி முருகன் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். மாவட்டச் செயலாளர் கான்சாபுரம் காளிதாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தென்னை விவசாயம் குறித்த பிரச்சனைகளை, சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஏ விஜய முருகன் விரிவாக விளக்கிப் பேசினார். அவர் தனது உரையில், வியாபாரிகள், தென்னை விவசாயிகளிடம் தேங்காய் கொள்முதல் செய்யும் போது, 1௦௦-க்கு 15 காய்களை லாபக்காய்கள் என்று எடுத்துக் கொள்வதைத் தடுக்க வேண்டும் என்றார்.

தென்னை மரங்களுக்கு தென்னை வளர்ச்சி வாரியம் மூலமாகக் காப்பீடு செய்து தர வேண்டும். தென்னையில் வெள்ளை ஈ நோயைக் கட்டுப்படுத்திட வேண்டும். மனிதர்களுக்கு மாரடைப்பு ஏற்படுத்தும் பாமாயில் எண்ணையை ரேஷன் கடைகளில் விநியோகம் செய்வதற்குப் பதிலாக, நன்மை தரும் தேங்காய் எண்ணையை விற்பனை செய்ய வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கிட வேண்டும் என்றும் அரசுக்கு வலியுறுத்தினார்.
புதிய ஒன்றியக் குழுத் தலைவராக முருகன், செயலாளராக அப்பாஸ், பொருளாளராக முனியாண்டி, நிர்வாகிகளாக வழக்கறிஞர் எஸ். ரமேஷ், சுசீலா, கணேசன், தங்கவேல், கருப்பையா, வினோத் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். விழாவின் இறுதியில், அனைத்து சமுதாய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், விவசாயிகளின் போராளியுமான மறைந்த ஆர். முத்தையா அவர்களின் திருவுருவப்படத்தை சாமி. நடராசன் திறந்து வைத்தார்.