விருதுநகரில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து கைதிகள் சிலரை மதுரை மத்திய சிறைக்கு அனுப்பிய போது ஏற்பட்ட ரகளையில், கைதி ஒருவர் தனது தலையால் போலீஸ் வாகனத்தின் கண்ணாடியில் முட்டியதில் கண்ணாடி உடைந்தது. கைதியும் காயம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் – மதுரை சாலையில், விருதுநகர் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. 10 அறைகள் கொண்ட இந்த சிறைச் சாலையில் 255 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 150 கைதிகள் மட்டுமே தங்கும் வசதிகள் கொண்ட சிறை அறைகளில் கூடுதலாக கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதால், அவ்வப்போது கைதிகளுக்குள் மோதலும் ஏற்பட்டு வந்தது. மேலும் பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய 12 பேர் இங்குள்ள சிறையின் 2 அறைகளில் அடைக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மற்ற அறைகளில் இருக்கும் கைதிகளும் கூடுதல் உணவு மற்றும் வசதிகள் கேட்டு சிறை வார்டன்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று, சிறையின் 5வது அறையில் இருந்த வடிவேல்முருகன் என்ற கைதி, பிளேடு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி வார்டன்கள் அந்த அறையில் சோதனை செய்தனர். அங்கு பிளேடு எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் கைதி வடிவேல்முருகனை வேறு ஒரு அறைக்கு, சிறை வார்டன்கள் மாற்றம் செய்தனர். இதற்கு அவருடன் இருந்த கைதிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சிறைக்குள் வாக்குவாதம் தகராறில் ஈடுபட்ட 27 கைதிகளை, மதுரை மத்திய சிறைக்கு மாற்றுவதற்கு சிறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இன்று காலை, முதல்கட்டமாக 13 கைதிகளை மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்வதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன், காவல் வேனில் கைதிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். வேனில் ஏறும் போது ஒரு கைதி தனது தலையால் போலீஸ் வேனின் கண்ணாடியில் பலமாக மோதினார். இதில் கைதியின் மண்டை உடைந்தது. போலீஸ் காவல் வேனின் கண்ணாடியும்ள உடைந்து விழுந்தது. மேலும் கைதிகள் பயங்கரமாக கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பிற்காக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, 13 கைதிகள் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் விருதுநகர் சிறைச்சாலை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.