மதுரை மாநகராட்சி ஆணையாளர் கௌரவம் குமார், பெரியார் பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள நடைபாதை, பேருந்து நிறுத்துமிடம், பொது கழிப்பறை, மழைநீர் வடிகால்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன், பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்லும் பகுதிகளில் உள்ள சேதமடைந்த சாலைகளை சீர் செய்திடவும், நடைபாதையில் உள்ள தரை தளத்தில் பெயர்ந்துள்ள தளத்தினை சீர் செய்து பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக சரிசெய்திடவும், மேலும் சிறு சிறு மராமத்து பணிகளை உடனுக்குடன் சரிசெய்திடவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

மேலும், மழைகாலத்தை கருத்தில் கொண்டு கழிப்பறைகளை அவ்வப்போது சுத்தப்படுத்திட தெரிவித்ததுடன், மழைநீர் பேருந்து நிலையத்தில் தேங்காதவாறு வடிகால்களை அவ்வப்போது கண்காணித்து மழைநீர் சீராக செல்வதற்கு உரிய பணிகளை அந்தந்த பகுதியில் உள்ள பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து, விதிமுறைகளை மீறி ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்றிடவும், நடைபாதைகளை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, ஆணையாளர் அவர்கள், எல்லீஸ் நகர்ப்பகுதியில் 70 அடி சாலையில் இரு புறங்களிலும் உள்ள கால்வாய்களை பார்வையிட்டதுடன், மழை காலங்களில் மழைநீரானது கால்வாய்களில் சீராக செல்வதற்கு ஏதுவாக கால்வாய்களை அவ்வப்போது தூர்வாரிடவும், அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, எல்லீஸ் நகரில் உள்ள குழந்தைகள் மையம் அருகில் உள்ள பகுதியில் குப்பைகள் மற்றும் மழைநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டு, தேங்கியுள்ள மழைநீரையும், குப்பைகளையும் உடனடியாக அகற்றிடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர் பாமாமுருகன் ,
உதவி ஆணையாளர் குமரன் , உதவி செயற்பொறியாளர் முத்து, உதவி நகர திட்டமிடுநர் கோவிந்த பிரபாகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.




