• Thu. Oct 22nd, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் மேம்பாலப் பள்ளங்களை சீரமைத்து உயிர்களைக் காத்த பள்ளி மாணவர்கள்!

ByKalamegam Viswanathan

Oct 22, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இரண்டாவது ரயில்வே மேம்பாலம், தென் மாவட்டங்களில் இருந்து மதுரை நகருக்குள் நுழைவதற்கும், புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் செல்வதற்கும் மிக முக்கியப் பாதையாக விளங்கி வருகிறது. இந்த மேம்பாலத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

தொடர் கதையான விபத்துகள்:
இந்தச் சூழலில், கடந்த சில மாதங்களாகப் பாலத்தின் பல இடங்களில் ஆபத்தான முறையில் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து காயமடைந்து வந்தனர். இந்த மேம்பாலம் மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் வரும் நிலையில், ஆபத்தான பள்ளங்களைச் சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சார்பில் துறைசார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

களத்தில் இறங்கிய மாணவர்கள்:
இந்நிலையில், திருநகர் பகுதியில் செயல்பட்டு வரும் முக்குளத்தூர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் பெற்றோர், இந்த மேம்பாலப் பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தார். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட பள்ளி நிர்வாகமும், பள்ளித் தலைமை ஆசிரியரும் உடனடியாகச் செயல்பட முடிவெடுத்தனர்.
பள்ளித் தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி, பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட (NSS) மாணவர்கள் களத்தில் இறங்கினர். மணல் மற்றும் சிமெண்ட் கலவைகளைத் தாங்களே தயார் செய்து, பாலத்தில் இருந்த ஆபத்தான பள்ளங்கள் அனைத்தையும் சிமெண்ட் கலவைக் கொண்டு நிரப்பிச் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

பொதுமக்கள் பாராட்டு:
நெடுஞ்சாலைத் துறை செய்யத் தவறிய பணியை, சமூகப் பொறுப்புணர்வுடன் முன்னின்று செய்த பள்ளி மாணவர்களையும், ஊக்கமளித்த தலைமை ஆசிரியரையும் அப்பகுதி மக்களும், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் வெகுவாகப் பாராட்டிச் சென்றனர்.

சமூக ஆர்வலர்களின் கோரிக்கை:
“நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் ஆரம்பத்திலேயே கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்திருந்தால், பல விபத்துகளையும் பொதுமக்களின் காயங்களையும் தவிர்த்திருக்கலாம். இனியாவது துறைசார்ந்த அதிகாரிகள் விழித்துக்கொண்டு, இதுபோன்று மேம்பாலங்கள் மற்றும் முக்கியச் சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை உடனடியாகச் சீரமைத்தால் மட்டுமே பெரிய அசம்பாவிதங்களைத் தடுக்க முடியும்” எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரிகளின் அலட்சியப்போக்கிற்கு இடையே, பள்ளி மாணவர்களின் இந்தச் சமூக நற்பணி அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.