கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த சீன விளையாட்டு வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் அதிருப்தியடைந்த மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு
எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் மக்கள் தொடர்ச்சியாக வீதிகளில் இறங்கி போராடினர். பல இடங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, பொதுமக்களின் கோபத்தை தணிக்க சில கட்டுப்பாடுகளை தளர்த்திய சீன அரசு, போலீஸ் படை மூலம் போராட்டங்களை முடக்கியது.
இந்த நிலையில் சீனாவில் அடுத்த வாரம் தேசிய கூடைப்பந்து போட்டி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் பங்கேற்கும் வீரர்கள் கொரோனா விதிமுறைகளின் படி பீஜிங்கில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஜெர்மி லின் என்கிற கூடைப்பந்து வீரர் கொரோனா கட்டுப்பாடு என்கிற பெயரில் அடிப்படை வசதிகள் இல்லாத ஓட்டலில் வீரர்கள் தனிமைப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டார். இது சர்ச்சையானதை தொடர்ந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது. எனினும் இந்த சம்பவம் தொடர்பாக கூடைப்பந்து வீரர் ஜெர்மி லின்னுக்கு 10,000 யுவான் (சுமார் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம்) அபராதம் விதித்து சீன கூடைப்பந்து சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.