சென்னையில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் டோனட் கேக் வாங்கி சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். வழக்கறிஞரான இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டு அருகே உள்ள பிரபல தனியார் பேக்கரி ஒன்றில் தனது குழந்தைக்கும், அவரது உறவினர் குழந்தைக்கும் டோனட் கேக்குகளை வாங்கிக் கொடுத்துள்ளார். டோனட் கேக்குகளை சாப்பிட்ட குழந்தைகள் இருவருக்கும் திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தைகள் இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வீட்டில் மீதம்இருந்த டோனட் கேக்குகளை பெற்றோர் சோதித்ததில், கேக்குகள் பூசனம் அடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு குழந்தையின் பெற்றோர் சென்று கேட்டபோது கடையில் இருந்த ஊழியர் முன்னுக்குப் பின் முரணான பதில் கூறியதாக தெரிகிறது.
அதேநேரம் குழந்தைகளின் உறவினர்கள் பேக்கரியை சூழ்ந்ததையடுத்து பேக்கரியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீதமிருந்த டோனட் கேக்குகளை கடை ஊழியர் குப்பையில் வீசியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை போலீஸார் விசாரித்து வரும் நிலையில், பேக்கரியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பேக்கரியில் உணவு பாதுகாப்பு பயிற்சி பெற்ற நபர் ஒருவரும் இல்லை என்பதும், ஊழியர்கள் முறையாக சுகாதார சான்றிதழ்களை பெறவில்லை என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக கடையின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தனியார் பேக்கரியில் டோனட் கேக் வாங்கி சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்
