• Thu. Apr 25th, 2024

பாப்பாபட்டி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் – பிரம்மண்டமான வரவேற்பு!..

Byமதி

Oct 2, 2021

தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் வருடம் தோறும் காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர் தினங்களில் நடைபெறுகிறது. அந்த வகையில், காந்தி ஜெயந்தி தினமான இன்று தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த கூட்டம் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 420 கிராம ஊராட்சிகளில், 44 கிராமங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. எனவே மீதமுள்ள 376 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

அதில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதற்கான ஏற்பாடுகளை முன்னாள் சட்டப்பேரவை தலைவர் மற்றும் தி.மு.க தேர்தல் பணிக்குழுச் செயலாளர் சேடப்பட்டி.இரா,முத்தையா மற்றும் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் அவர்கள் சிறப்பாக செய்துள்ளனர். கலெக்டர் அனீஷ்சேகர் பாப்பாபட்டி கிராமத்துக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதுரைக்கு வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாப்பாபட்டி ஊராட்சிக்கு செல்லும் வழியில் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்கிறார். தற்போது அவர் பாப்பாபட்டி ஊராட்சியில் ஒச்சாண்டம்மன் கோவில் அருகில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று, கிராம மக்களிடம் கலந்துரையாடி அவர்களது குறைகளை கேட்டறிகிறார்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்த பிறகு நடைபெறும் முதல் கிராம சபை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பாப்பாபட்டி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பது முக்கியத்துவம் வாயந்ததாக பார்க்கப்படுகிறது.
முதல்வர் குறிப்பாக இங்கு நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள காரணம் என்னவென்றால், மதுரை மாவட்டம், செல்லம்பட்டி யூனியனுக்கு உட்பட்ட பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், ஊராட்சிகளின் தலைவர் பதவிகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டன.

இதை இந்தப்பகுதிகளைச் சேர்ந்த பிற சமூகத்தினர் இதை ஏற்காததால் 1996 முதல் இந்த ஊராட்சிகளில் தேர்தல் நடத்த முடியவில்லை. தேர்தல் நடந்தாலும், தேர்ந்து எடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து இந்த ஊராட்சிகள் நாடு முழுவதும் கவனத்தை பெற்றன. அனைத்து அரசுகளும் தேர்தலை நடத்த நெருக்கடி கொடுத்தன.
இந்த சூழ்நிலையில் பெரும் முயற்சிக்கு பிறகு கடந்த 2006-ல் அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த உதயசந்திரன் இந்த ஊராட்சிகளுக்கு தேர்தலை நடத்தி முடித்தார். இதையடுத்து 10 ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது, அப்போது மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உதயசந்திரன் தற்போது முதல்வரின் தனி செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு தற்போது வரை இந்த ஊராட்சிகளில் சுமூகமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாகவே பாப்பாபட்டி ஊராட்சியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மதுரை மேலமாசி வீதியில் உள்ள காந்தி நினைவு இல்லத்துக்கு மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். அங்குள்ள காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

1921-ல் காந்தியடிகள் மதுரைக்கு வந்த போது இந்த இல்லத்தில் தங்கி இருந்த போதுதான் அவர், அரையாடை மாறும் முடிவை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் காந்தி நினைவு அருங்காட்சியகத்துக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார்.

இந்த அருங்காட்சியகத்தின் புனரமைப்பு பணிக்காக தமிழக அரசு சார்பில் ரூ.6 கோடி வழங்கப்படும் என சுதந்திர தின உரையின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அந்த பணிகள் தொடர்பாக அருங்காட்சியக நிர்வாகிகளுடன் முதல்வர் கலந்துரையாடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *