• Fri. Apr 26th, 2024

வீரபாண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ வீரபாண்டி ராஜா மாரடைப்பால் மரணம்.. தி.மு.க.வினர் அதிர்ச்சி!..

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா இன்று (அக்டோபர் 2) காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 58. இன்று வீரபாண்டி ராஜாவுக்கு பிறந்தநாள். அதற்காக இன்று காலை 7.30 மணிக்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க திட்டமிட்டிருந்தார்.


இந்நிலையில் காலை தனது வீட்டில் குளிக்க தயாரானபோது மயங்கி கீழே விழுந்துள்ளார். உறவினர்கள் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக வீரபாண்டி ராஜா உயிரிழந்ததாக கூறினர். வீரபாண்டி ராஜாவின் மரணம் அவரது குடும்பத்தினரிடையேயும் திமுகவினரிடையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


“எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் திறம்பட செய்து முடிக்கக் கூடியவர் வீரபாண்டி ராஜா. கழகப் பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டதோடு சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்பட மக்கள் பணியாற்றியவர்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் வீராபாண்டி அருகே உள்ள பூலாவரி கிராமத்தின் இல்லத்தில் வீரபாண்டி ராஜா உடல் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மதுரைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் பிற்பகலில் பூலாவரி கிராமத்துக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *