• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

முதல்வர் 2நாள் சுற்றுப் பயணமாக கோவை வருகை..,

BySeenu

Aug 10, 2025

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொள்வதுடன் முடிவற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். மேலும் கட்சியினருடன் ஆலோசனைகளை செய்வதோடு, மக்களையும் சந்தித்து வருகிறார்.

கடந்த 22, 23 ஆம் தேதி கோவை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள இருந்தார். ஆனால் அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதால் இந்த நிகழ்ச்சிகளை அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கோவை வந்து உள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அவருக்கு கோவை, திருப்பூர் மாவட்டங்கள் சார்பில் தி.மு.க வினர் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். அதன் பின்னர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நரசிங்க புரத்துக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு இரவு 8.50 மணிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.

இரவு 9:00 மணிக்கு அங்கு இருந்து புறப்பட்டு சென்று இரவில் உடுமலைப்பேட்டையில் தங்குகிறார்.

நாளை காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறார்.

பின்னர் பகல் 12 மணிக்கு பொள்ளாச்சியில் வருகை தரும் மு.க.ஸ்டாலின் அங்கு காமராஜர், வி.கே.பழனிச்சாமி, கவுண்டர் சுப்பிரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரது உருவ சிலைகளை திறந்து வைக்கிறார்.

பரம்பிக்குளம் ஆழியாறு அணை கட்டுமான பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவரங்கத்தை திறந்து வைக்கிறார். பின்னர் வி.கே.பழனிச்சாமி அரங்கத்தினையும் ரிப்பன் வெட்டி திறக்கிறார்.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டப் பணிகள் தொடர்பான புகைப்பட கண்காட்சி மற்றும் திட்டத்தின் மாதிரி வடிவத்தை பார்வையிடுகிறார்.

இந்நிகழ்ச்சிகள் முடித்துக் கொண்டு பொள்ளாச்சியில் இருந்து கார் மூலம் கோவைக்கு வருகிறார். கோவை விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

முதலமைச்சரின் வருகை ஒட்டி கோவை நகரில் 500 போலீசாரும், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் 800 போலீசார் உள்பட மொத்தம் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.