• Mon. May 29th, 2023

அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய அறிவுரை..!

Byவிஷா

Apr 25, 2022

கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்
நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் கைவிடலாம் என்று அண்மையில் மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. அதேசமயம், தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாடு முழுவதும் சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேரளா, மிசோரம், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதேசமயம், கொரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ உலகம் முழுவதும் சில நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் வைரஸின் பிஏ.2 துணை மாறுபாட்டை விட எக்ஸ்இ எனப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபானது, 10 சதவீதம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இது நான்காம் அலைக்கு வித்திடலாம் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாதிப்பு குறைந்திருந்த நிலையில் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களிலிருந்து வந்தவர்களால் சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று பரவியுள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, காணொலி காட்சி மூலம் தலைமை செயலகத்தில் இருந்து ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று, உயிரிழப்பு குறைந்துள்ளது. ஒமைக்ரான் காரணமாக ஏற்பட்ட 3ஆவது அலையின் தாக்கம் பெரிதாக இல்லை. கடந்த ஒரு வாரகாலமாக வடமாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் 91.5 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 74.75 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். பூஸ்டர் டோஸ் 41.66 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் இது அதிகம். இருப்பினும், தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.” என்று வலியுறுத்தினார். எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *