தமிழக முதல்வரை பார்த்து ஜெகன்மோகன் கற்றுக்கொள்ள வேண்டும் என ஜன சேனா கட்சியின் நிர்வாக குழு உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான நாதெல்ல மனோகர் தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் ஜன சேனா கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் சபாநாயகர் நாதெல்ல மனோகர் நிருபர்களிடம் கூறியதாவது:ஆந்திர மாநிலத்திற்கு அமராவதி தலைநகராக இருக்க வலியுறுத்தி விவசாயிகள் செய்துவரும் பாதயாத்திரை போராட்டத்திற்கு ஜன சேனா கட்சி முழு ஆதரவு தரும். மக்களின் நலனுக்காக நாங்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவும் தயங்கமாட்டோம்.
தற்போது பெய்த புயல் மழையில் ஆந்திர மாநில அரசின் செயல்பாடுகள் மிகவும் வருத்தம் அளிக்கிறது.
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதில் பின்தங்கியுள்ளது. நமது அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அவர்களை பார்த்து ஜெகன்மோகன் ரெட்டி கற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் நலனே முக்கியம் எனக் கருதி மழை பாதிப்பு தொடங்கியது முதல் பம்பரமாக சுழன்று நேரடியாக களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக உங்களுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என்று கூறி அனைத்து வசதிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்தார்.
ஆனால் நமது ஆந்திர மாநிலத்தில் முதல்வர் வீட்டிலிருந்தபடியே வொர்க் பிரம் ஹோம் என்று இருந்ததன் விளைவே நெல்லூர், கடப்பா, சித்தூர், அனந்தபூர் மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநில அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உடனடியாக நிவாரணங்களை வழங்க வேண்டும். இல்லையேல் ஜன சேனா கட்சி மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.அப்போது மாவட்ட பொறுப்பாளர் ஹரி பிரசாத், மாவட்ட செயலாளர் கீரன் ராயல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.