சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில் பிரதமர் வருகையையொட்டி வருகிற 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்களும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் என 5 காவல் அடுக்காக நின்று பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள்.
நேரு ஸ்டேடியம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. ஐ.என்.எஸ். வளாகத்தில் இருந்து நேரு ஸ்டேடியம் வரை சாலை மார்க்கமாக செல்லும் பிரதமரின் பாதுகாப்புக்காக 18 ஆயிரம் போலீசாரும், விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் 4 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதே போன்று கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரையில் பிரதமர் செல்லும் சாலைகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.