• Mon. Feb 2nd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

வடபழனி முருகன் கோவில் வழக்கு முடித்துவைப்பு.. அறநிலையத்துறைக்கு பறந்த அதிரடி ஆணை!

By

Sep 9, 2021 ,

சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் அனுமதி பெறாமல் கட்டுமானங்களை மேற்கொண்ட சென்னை மாநகராட்சி பொறியாளர் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வடபழனியை சேர்ந்த என்.ஜி.தெய்வகடாட்சம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், வடபழனி நெற்குன்றம் பாதையில் அமைந்துள்ள 2000 சதுர அடி நிலம் வடபழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமானது என்றும், அதில் கட்டுமானங்களை மேற்கொள்ள அறநிலையத்துறையிடம் அனுமதி பெறாமல், சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டல செயற்பொறியாளர் வி.பெரியசாமி 47 லட்ச ரூபாய் மதிப்பிலான இரு கட்டடங்களை கட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்தக் கட்டடங்களில் அம்மா உணவகம், நியாய விலை கடை ஆகியவை இயங்கி வருவதாகவும், சென்னை குடிநீர் வாரியம், மின் வாரியம் ஆகியவற்றின் அலுவலகங்கள் அமைந்திருப்பதாக பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குத்தகை காலம் 2015ஆம் ஆண்டு முடிந்த நிலையிலும், அம்மா உணவகமும், நியாய விலை கடையும் தொடர்ந்து இயங்கிவருவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பொறியாளர் பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்கும்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு, இந்துசமய அறநிலையத்துறை, சென்னை மாநகராட்சி ஆகியோரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, தெய்வகடாட்சம் அளித்த புகாரில் விசாரணை தொடங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவுசெய்த நீதிபதி, குற்றச்சாட்டுக்கு உள்ளான பொறியாளர் பெரியசாமி விளக்கம் அளிக்க வாய்ப்பளித்து, விசாரணையை முடித்து சட்டத்திற்குட்பட்டு 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத்துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.