மருத்துவ உலகில் புதிய சாதனையாக, சென்னை சென்னை கிளெனீகல்ஸ்
மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் 47 வயது பெண்ணின் உடலில் இருந்த 4.95 கிலோ எடையுடைய மிகப்பெரிய கருப்பைக் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

இந்த அரிதான அறுவை சிகிச்சை டா வின்சி XI ரோபோடிக் முறையை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் உலக அளவில் மிகச் சில மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படும் நுட்பமான சிகிச்சையை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செய்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் வசிக்கும் 47 வயது பள்ளி ஆசிரியை ரம்யா என்ற பெண் பல வருடங்களாக வயிற்றில் வலி, வீக்கம் மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.
பரிசோதனைக்குப் பிறகு அவர் கருப்பையில் மிகப்பெரிய கட்டி இருப்பது தெரியவந்தது. அக்கட்டியை வழக்கமான முறையில் அகற்றுவது ஆபத்தானது என்பதால் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

டாக்டர் பத்மப்ரியா விவேக் தலைமையிலான நிபுணர் குழு நான்கு மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையில் கட்டியை முழுமையாக அகற்றி, நோயாளியை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். தற்போது அவர் நல்ல நலத்துடன் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார்.
இந்த சாதனை குறித்து டாக்டர் பத்மப்ரியா விவேக் தெரிவித்ததாவது —
“ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையின் துல்லியமும், குறைந்த இரத்த இழப்பும், வேகமான குணமாவதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது. இத்தகைய சிகிச்சைகள் மூலம் பெண்களுக்கான சிக்கலான கருப்பை பிரச்சனைகளையும் எளிதாக தீர்க்கலாம்” என்றார்.
மேலும், உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதிகளுடன் ரோபோடிக் அறுவை சிகிச்சை தமிழகத்தில் சிறப்பாக நடைபெறுவது பெருமைக்குரிய நிகழ்வாகும் என்றும், நோயாளி இப்போது சீராகப் பூரண நலத்துடன் வீடு திரும்ப தயாராக உள்ளார் என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.











; ?>)
; ?>)
; ?>)