• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

பயணிகளால் நிரம்பி வழியும் சென்னை விமான நிலையம்!..

Byமதி

Oct 14, 2021

தமிழகத்தில் ஆயுத பூஜை பண்டிகை மற்றும் மிலாதுநபியை முன்னிட்டு தொடா்ந்து விடுமுறை வருவதால் வேலை காரணமாக பல்வேறு இடங்களில் வசிப்பவர்கள், தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்கின்றனர். இதனால் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பஸ், ரெயில்களில் முன்பதிவு பல வாரங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. இதனால், டிக்கெட் கிடைக்காத பயணிகள், விமான பயணங்களை மேற்கொள்கின்றனா். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

நேற்று முன்தினம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 190 விமானங்கள் இயக்கப்பட்டு, 15 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். ஆனால் நேற்று 213 விமான சேவைகளாக அதிகரித்து புறப்பாடு மற்றும் வருகை பகுதியில் பயணிகள் எண்ணிக்கை 20 ஆயிரமாக அதிகரித்து உள்ளது. ஒரே நாளில் 23 விமானங்களும், 5 ஆயிரம் பயணிகளும் அதிகரித்து உள்ளது. இன்று, பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் உள்நாட்டு விமான கட்டணங்களின் திடீா் உயா்வு, பயணிகளை அதிா்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வழக்கமாக ரூ.4,500 ஆக இருந்த கட்டணம், தற்போது ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7,500 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, திருவனந்தபுரம், பெங்களூரு செல்லும் பயணிகள் கட்டணமும் அதிகரித்துள்ளது.

விமான நிறுவனங்கள், பயணிகள் கூட்டம் அதிகரிக்கும்போது, விமான கட்டணத்தை அதிகரித்து விடுவதாக விமான பயணிகள் தரப்பில் கூறுகின்றனா். ஆனால் விமான நிறுவனங்கள், முதலில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு குறைந்த கட்டண டிக்கெட்டும், அதன்பின்பு வருபவா்களுக்கு படிப்படியாக கட்டணம் அதிகரிக்கும். இதுதான் நடைமுறையில் உள்ளது, என்று தெரிவித்துள்ளன.