• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வெள்ள சேதங்களை பார்வையிட வந்தது மத்திய குழு

Byமதி

Nov 22, 2021

மத்திய குழு இன்று மதியம் மழை, வெள்ள சேதங்களை பார்வையிட சென்னை வந்தது. குழு உறுப்பினர்கள் இரு பிரிவாகப் பிரிந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், இரண்டு நாட்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையால், பெரும்பாலான மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்தது. பயிர்கள் நீரில் மூழ்கின; சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன. முதற்கட்டமாக தமிழக அரசு எடுத்த கணக்கெடுப்பில், 2,629.29 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் சார்பில், எம்.பி., – டி.ஆர்.பாலு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, தமிழகத்தில் முதற்கட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்த சேத விபரங்கள் அடங்கிய மனுவை அளித்து, உடனடியாக 549.63 கோடி ரூபாய் வழங்கும்படி கோரிக்கை விடுத்தார்.

அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட, மத்திய குழுவை அனுப்புவதாக அமித் ஷா தெரிவித்தார். அதன்படி, மத்திய உள்துறை இணை செயலர் ராஜிவ் சர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், நிதி மற்றும் செலவினங்களுக்கான அரசு ஆலோசகர் ஆர்.பி.கவுல், விவசாயத் துறை இயக்குனர் விஜய்ராஜ் மோகன், மத்திய நீர்வள கமிஷனின் சென்னை இயக்குனர் தங்கமணி. மத்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சக மண்டல அதிகாரி ரனன்ஜெய் சிங், மின் துறை துணை இயக்குனர் பாவ்யா பாண்டே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி வரபிரசாத் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

இன்று மதியம் சென்னை வந்த இந்தக் குழு, நாளையும், நாளை மறுதினமும் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று, சேதங்களை பார்வையிட உள்ளது. குழு இரண்டு பிரிவாகப் பிரிந்து, நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஒரு குழுவும்; கன்னியாகுமரிக்கு மற்றொரு குழுவும் செல்கின்றன. மறுநாள் 23ம் தேதி கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு ஒரு குழுவும்; வேலுார், ராணிப்பேட்டைக்கு மற்றொரு குழுவும் செல்கின்றன.

ஒரு குழுவை, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி; மற்றொரு குழுவை, வருவாய் துறை செயலர் குமார் ஜெயந்த் வழிநடத்தி செல்வர். சேதங்களை பார்வையிட்ட பின், மத்திய குழு 24ம் தேதி தலைமை செயலகத்தில், முதல்வரை சந்திக்க உள்ளது.