குறள் 351:
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்மருளானாம் மாணாப் பிறப்பு. பொருள் (மு.வ): மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
குறள் 350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு. பொருள் (மு.வ): பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.
குறள் 349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றுநிலையாமை காணப் படும். பொருள் (மு.வ): இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.
குறள் 348
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கிவலைப்பட்டார் மற்றை யவர். பொருள் (மு.வ):முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.
குறள் 347
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர்க்கு. பொருள் (மு.வ): யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.
குறள் 346
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த உலகம் புகும் பொருள் (மு.வ): உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.
குறள் 345
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்உற்றார்க்கு உடம்பும் மிகை. பொருள் (மு.வ): பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?.
குறள் 344
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து. பொருள் (மு.வ): தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.
குறள் 343
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்வேண்டிய வெல்லாம் ஒருங்கு.பொருள் (மு.வ):ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.
குறள் 342
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்ஈண்டுஇயற் பால பல.பொருள் (மு.வ):துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.








