• Thu. Jan 23rd, 2025

நடிகர் சங்கத் தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிப்பு…

Byகாயத்ரி

Mar 12, 2022

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இதற்கிடையே தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியையும் நியமித்தது. இந்த வழக்கு கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் செல்லும் எனவும் அதில் பதிவான வாக்குகளை 4 வாரங்களில் எண்ண வேண்டும் எனவும் தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையானது மார்ச் 20-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேர்தல் முடிவு அடுத்து வரும் சில நாட்களில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் (அல்லது) அவரது முகவர் மட்டுமே வாக்குஎண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.