சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் திமுக ஒன்றிய செயலாளர்க்கு போனில் கொலை மிரட்டல் விடுத்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (49). இவர் வெம்பக்கோட்டை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற கலைஞர் கனவு இல்லத் திட்டத்திற்கு வருவாய் துறை அமைச்சருடன் பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில் அன்று இரவு கிருஷ்ணகுமாரை இனிமேல் யூனியன் அலுவலகத்திற்கு வரக்கூடாது என்றும் வந்தால் கொலை செய்து விடுவேன் என வெம்பக்கோட்டை முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் எதிர் கோட்டை மணிகண்டன் போனில் மிரட்டி உள்ளார். பின்னர் கிருஷ்ணகுமார் அதனை கண்டு கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகுமாரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தென்காசி அருகே மனைவி கண் முன்னே கணவர் தலை துண்டிப்பு என்ற குறுஞ்செய்தியை அனுப்பி மணிகண்டன் கிருஷ்ணகுமாருக்கு கொலை மிரட்டல் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் எனவே முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கிருஷ்ணகுமார் அளித்த புகாரின் பேரில் ஏழாயிரம் பண்ணைபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.