• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

லஞ்சம் பெற்றதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட 3பேர் மீது வழக்கு பதிவு!..

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை துணை வேந்தராக பணியாற்றியவர் சாமிநாதன். இந்த காலகட்டத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லா ஊழியர்கள் நியமனம் செய்ததில் முறைகேடு நடந்ததாக சென்னை ஊழல் தடுப்பு இயக்குனரகத்திற்கு புகார் அனுப்பப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் பேராசிரியர் மற்றும் விரவுரையாளர் பணிகளுக்கு 154 பேர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர் பணிக்கு 47 பேர் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து குறிப்பிட்ட அவர்களைத் தேர்ந்தெடுத்து சான்றிதழ் தணிக்கை செய்யப்பட்டது. இந்த தணிக்கையில் போலி சான்றிதழ்களை கொண்டு தகுதி இல்லாத நபர்களை பணி நியமனம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊழியர் நியமனத்தில் முறைகேடு நடந்த புகாரின் அடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சாமிநாதன் மற்றும் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து ஆகியோர் மீது கூட்டு சதி ஏமாற்று வேலை மோசடி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் சேலம் மாவட்ட லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே 2016 முதல் 2019 ம் கல்வியாண்டுகளில் முறையான கட்டமைப்பு இல்லாத கல்லூரிகள் தொடங்கும் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கவும் முறைகேடாக அனுமதி அளித்து இருப்பது அம்பலமாகியுள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 5 கல்லூரிகளில் ரூபாய் 3.26 கோடி வரை லஞ்சமாக பெற்று இருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் முன்னாள் துணைவேந்தர் சாமிநாதன் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து, முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் லீலா ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் பதிவாளர் அங்கமுத்து தன் மீதான புகார்களுக்கு பயந்து கடந்த 2017-ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.