• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் உள்பட 8 பேர் மீது வழக்கு!

ByP.Kavitha Kumar

Jan 17, 2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனுமதியின்றி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவால் கடந்த டிச.14-ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10- ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.

இந்த நிலையில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக அனுமதியின்றி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளர்களுக்கான சின்னம் அறிவிக்கப்படாத சூழலில், நாதகவினர் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் வேட்பாளர் சீதாலட்சமி புகைப்படம் போட்ட பதாகைகளை ஏந்தி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் அனுமதியின்றி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக கண்காணிப்பு குழு அளித்த புகாரின் பேரில், நாதக மாவட்ட செயலாளர் நவநீதன் உள்ளிட்ட 5 பேர் மீது வடக்கு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் அடையாளம் தெரியாத 3 பேர் மீது தேர்தல் நடத்தை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.