• Tue. Feb 18th, 2025

ரூ.525 கோடி மதிப்பில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்…ஈசிஆரில் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி!

ByP.Kavitha Kumar

Jan 17, 2025

சென்னை ஈசிஆர் முட்டுக்காடு பகுதியில் ரூ.525 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 2024-2025-ம் நிதி ஆண்டிற்கான தமிழக அரசு நிதிநிலை அறிக்கை ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் சர்வதேச கண்காட்சிகள் மற்றும் பன்னாட்டு கூட்டங்கள் நடத்திடும் வகையில் நவீன வசதிகளுடன் உலகத்தரத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என நிதி மற்றும் மனித வளம் மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். 8 ஆயிரம் சதுரஅடி பரப்பில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.

இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் மற்றும் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில். ஈசிஆர் முட்டுக்காடுவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கி உள்ளது. கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி கிடைத்தவுடன் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டும் பணி தொடங்க உள்ளது.