தீபாவளிக்கு இன்னும் 55 நாட்களே இருப்பதால் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வீடுகளிலும் காட்டுப்பகுதியில் தகர செட்டு அமைத்து பட்டாசு தயாரிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் உத்தரவின் பேரில் போலீசார் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசனுக்கு சட்ட விரோதமாக பட்டாசுகளை சிலர் தயாரிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சல்வார்பட்டி வருவாய் ஆய்வாளர் மாரீஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் கணேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் தாயில்பட்டி அருகே உள்ள பேரநாயக்கன்பட்டியில் இருந்து தெற்கு ஆணைகூட்டம் செல்லும் மெயின் ரோட்டில் மூடப்பட்டு கிடக்கும் தீப்பெட்டி ஆலையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை பார்த்து அதிரடியாக சோதனை நடத்தினார்கள் .
சோதனையில் பத்துக்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அதிகாரிகளை பார்த்ததும் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடினார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தலைமையில் தீப்பெட்டி ஆலையில் சோதனை இட்டதில் 20 பெட்டிகளில் பேன்சி ரக வெடிகள், 30 குரோஸ் வெள்ளைத் திரிகள், சோல்சா வெடிகள் ஐந்து மூடைகள் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்த மதிப்பு 5 லட்ச ரூபாய் ஆகும். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் கட்டடத்தின் உரிமையாளர் பேரநாயக்கன்பட்டியை சேர்ந்த ருத்ரப்ப நாயக்கர் ( 65 ), குத்தகைக்கு எடுத்து நடத்திய சிவகாசி விளாம்பட்டி அருகே உள்ள போடு ரெட்டியபட்டியைச் சேர்ந்த ராமர் (42 ),மேலும் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட போடுரெட்டியபட்டியை சேர்ந்த தங்கதுரை (48),கோட்டையூரை சேர்ந்த ஜான்சி ராணி (50) ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்