மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் 50 ஆண்டுகளாக ஓடை தண்ணீரில் இறந்தவர் உடலை சுமந்து செல்லும் அவலம். கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை .
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளத பெருமாள் கோவில்பட்டி கிராமம் திருமலாபுரம் ஊராட்சியை சேர்ந்த இக்கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
கிராமத்தில் பிற சமுதாயத்திற்கு தனி மயானமும் பட்டியலின மக்களுக்கு தனி மயானமும் உள்ளது. பெருமாள் கோவில் பட்டியின் கிழக்குப்புறம் பட்டியலின மக்களுக்கு என தனியாக அமைக்கப்பட்டுள்ள மயானத்தில் ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தகன மேடை அமைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை.

இதனால் பட்டியலின மக்கள் குடும்பங்களில் ஒவ்வொரு இறப்பு நேரும் போதும் உடலை தேர்கட்டி தூக்கி முழங்கால் முதல் இடுப்பளவு தண்ணீர் வரை உள்ள ஓடைப்பகுதி கழிவு நீரில் நடந்து பெரும் அவதிப்பட்டு மயானத்திற்கு சென்று வருகின்றனர்.
இது குறித்து கிராமம் உருவான கடந்த 50 ஆண்டுகளாக திருமலாபுரம் ஊராட்சி நிர்வாகம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தேனி மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றில் புகார் மனு அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இன 102 வயது குருசாமி என்ற முதியவர் இறந்து விட்டார். இவரது மனைவி இருந்து விட்ட நிலையில் தற்போது உள்ள 8 பிள்ளைகளும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து இறந்தவர் உடலை தூக்கிக்கொண்டு ஓடை கழிவுநீரில் நடந்துசென்று பெரும் அவதிப்பட்டு மயானத்தில் அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் உரிய நடவடிக்கை எடுத்து பெருமாள் கோவில்பட்டி பட்டியலின மக்களுக்கு மயானம் செல்ல பாதை அமைக்காவிட்டால் அடுத்த மரணம் ஏற்படும்போது பிரதத்துடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாகவும், இவர்கள் அறிவித்துள்ளதால் ஆண்டிபட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
