மின்னணு முறையில் ஏலம் விடப்படவுள்ள பிஎஸ்என்எல் நிலம் மற்றும் கட்டிட சொத்துக்களை வாங்க விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிஎஸ்என்எல் நிர்வாகம் 5 பகுதியில் உள்ள நில மற்றும் கட்டிட சொத்துக்களை மின் ஏலம் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை அண்ணா சாலையில் உள்ள டின் ரோஸ் தொலைபேசி தொடர்பகம், உடுமலைப்பேட்டையில் உள்ள தொலைபேசி தொடர்பு, மேட்டுப்பாளையத்தில் உள்ள மைக்ரோவேவ் கட்டட வளாகம், விழுப்புரத்தில் உள்ள டிடிஓ வளாகம், புதுச்சேரியில் உள்ள நிலம் மற்றும் கட்டிடங்கள் விற்பனைக்கான ஏலத்தை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதனை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் எம் எஸ் டி சி இணையதளத்திலும், ஆர். எப்.பி மற்றும் பிற ஆவணங்கள் குறித்த தகவல்களை பி.எஸ்.என்.எல் இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம் எனவும் ஆன்லைன் ஏலத்திற்கான விண்ணப்பத்தை ஆகஸ்ட் 17ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.