• Sun. Apr 28th, 2024

நாளை முதல் சென்னை தி.நகர் ஸ்ரீ பத்மாவதிதாயார் கோவில் பிரம்மோற்சவம்

Byவிஷா

Feb 27, 2024

சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் நாளை (28ம் தேதி) முதல் பிரமோற்சவம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜெ.சேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது..,
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் தி.நகரில் அமைத்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது இந்த கோயில் கும்பாபிஷேகம் செய்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து வரும் 28ம் தேதி (நாளை) முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை பிரமோற்சவம் நடக்கிறது. முதல் நாளான 28ம் தேதி காலை 9 மணிக்கு (துவஜா ரோகணம்) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 7 மணிக்கு சின்ன சேஷ வாகனம், 29ம் தேதி பெரிய சேஷ வாகனம், ஹம்ஸ வாகனம், மார்ச் 1ம் தேதி முத்து பந்தல், வசிம்ம வாகனம் நிகழ்ச்சியும், 2ம் தேதி கல்ப விருஷ வாகனம், மாலையில் அனுமந்த வாகனம், 3ம் தேதி பல்லக்கு உற்சவம், மாலையில் கஜ வாகன திருவீதி உலா நடக்கிறது. கோயிலை சுற்றி 4 முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெறும்.
4ம் தேதி சர்வ பூபால வாகனம், கருட வாகனம், 5ம் தேதி சூர்யபிரபை வாகனம், இரவில் சந்திர பிரபை வாகனம், 6ம் தேதி ரதோத்சவம், அஸ்வ வாகனம், 7ம் தேதி சக்ரஸ்நானம், மாலையில் த்வஜாவ ரோகனம், 8ம் தேதி புஷ்ப யாகத்துடன் நிகழ்ச்சி உடன் பிரமோற்சவம் நிறைவடைகிறது. பிரமோற்சவம் நடைபெறும் நாட்களில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தாயார் நிலையில் உள்ளது. கஜ வாகன திருவீதி உலாவின்போது பொது மக்களுக்கு இலவசமாக லட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
துணைத் தலைவர் சரண், பத்மாவதி தாயார் கோயில் பொறுப்பாளர் புஷ்பலதா மற்றும் திருப்பதி தேவஸ்தான உறுப்பினர்கள் மோகன் ராவ், அனில் குமார், கிருஷ்ணா ராவ், கார்த்திகேயன், கிஷோர் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *