• Mon. May 6th, 2024

விபத்தில் மூளைச் சாவு அடைந்த… தூய்மை காவலரின் உடல் உறுப்புகள் தானம்..!

ByKalamegam Viswanathan

Oct 11, 2023
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே விபத்து ஒன்றில் மூளைச்சாவு அடைந்த தூய்மைக் காவலரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (45). இவருக்கு திருமணம் முடிந்து முதல் மனைவி இறந்து விட்டதால், இரண்டாம் திருமணம் செய்திருந்தார். முதல் மனைவியின் மூலமாக 3 குழந்தைகளும், இரண்டாவது மனைவி மூலமாக 3 குழந்தைகளும் உள்ளனர். மாரியப்பன், முத்துசாமிபுரம் ஊராட்சியில் தூய்மை காவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி மாரியப்பன் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், மாரியப்பன் மூளைச் சாவு அடைந்தார். இதனையடுத்து உறவினர்கள் அனுமதியுடன் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு மதுரை மற்றும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது. மாரியப்பன் உயிரிழந்ததையடுத்து அவரது உடல், சொந்த ஊரான முகவூருக்கு கொண்டு வரப்பட்டது. அவரின் உடலுக்கு உறவினர்கள் இறுதிச் சடங்குகள் செய்து மரியாதை செலுத்தியவுடன், மாயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல் உறுப்பு தானம் செய்த மாரியப்பன் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்ற அரசு அறிவிப்பின்படி, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், காவல் துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி, சேத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஜெயலட்சுமி மற்றும் அதிகாரிகள் மாரியப்பனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து மாரியப்பனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த மாரியப்பனுக்கு 6 குழந்தைகள் இருப்பதால், அவர்களின் கல்வி செலவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் அரசு உதவி செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *