• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

காட்டுக்குள் பழங்குடியின முதியவர் சடலமாகக் மீட்பு

BySeenu

Jun 29, 2026

காட்டுக்குள் மாயமான பழங்குடியின முதியவர் சடலமாகக் மீட்பு – ஊனுண்ணி விலங்கு தாக்கிப் பலியானதாகத் வனத்துறை தகவல் – போலீஸார் விசாரணை !!!

கோவை, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோபநாரி காப்புக்காடு பகுதியில், காணாமல் போன பழங்குடியின முதியவர் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது, அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட
மூணுக்குட்டை பழங்குடியினர் குடியிருப்பில் வசித்து வந்தவர் வெள்ளிங்கிரி (வயது 60). இவர் கடந்த ஜூன் 27-ஆம் தேதி மாலை சுமார் 7.30 மணி அளவில் வனப்பகுதிக்குச் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து, வனத்துறை அதிகாரிகள் மற்றும் குடியிருப்பு மக்கள் இணைந்து கடந்த இரண்டு நாட்களாக அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நேற்று (ஜூன் 28) மதியம் சுமார் 1.00 மணி அளவில், மூணுக்குட்டை குடியிருப்பில் இருந்து சுமார் 350 மீட்டர் தொலைவில் உள்ள கோபநாரி காப்புக்காடு (RF) உட்பகுதியில் வெள்ளிங்கிரியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

வனச்சரக அலுவலர்கள் அளித்த தகவலின் பேரில், காரமடை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மீட்கப்பட்ட வெள்ளிங்கிரியின் உடலின் பெரும்பகுதி அடையாளம் தெரியாத கொடிய ஊனுண்ணி விலங்கினால் கொடூரமாகச் சிதைக்கப்பட்டு இருந்தது. இது சிறுத்தையின் தாக்குதலாக இருக்கலாம் என முதற்கட்டமாகக் கருதப்படுகிறது. தற்போது உடற்கூறு ஆய்வுக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே இது சிறுத்தை தாக்கி ஏற்பட்ட மரணமா ? அல்லது வேறு ஏதேனும் விலங்கின் தாக்குதலா ? என்பது உறுதியாகத் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

வனப்பகுதியை ஒட்டி உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் இரவு நேரங்களில் காட்டுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.