முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவைத் தொடர்ந்து, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் நடத்தப்படும் போராட்டங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, அதிமுக, பாஜக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது திமுக நிர்வாகி எனவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் கொடுமைகளை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டது.
அதில், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், வன்கொடுமைகள் அன்றாடம் அரங்கேறி வருவதும், இதனை ஜனநாயக முறையில் தட்டிக் கேட்கும் எதிர்கட்சிகளை காவல்துறையின் இரும்புக் கரம் கொண்டு அடக்குவதும், இந்த அவலங்களை சமத்துவம், சமூக நீதி ஆட்சி என்று அன்றாடம் பறைசாற்றிக் கொள்வதும், திராவிட மாடல் ஆட்சியின் அன்றாட அவலம் என விமர்சித்துள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள், அவலங்கள், பாலியல் சீண்டல்களை கண்டித்து, இன்று 27-12-2024, வெள்ளிக்கிழமை அன்று. அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட, தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் திருமதி. டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டமானது அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு, சிறப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில்..,
முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இயற்கை எய்தியதை தொடர்ந்து பாஜக மாவட்ட அளவிலான போராட்டங்கள் ஒத்தி வைக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
