மதுரை மாநகர பாஜக மாவட்டத் தலைவர் மருத்துவர் சரவணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பிரதமர் நரேந்திர மோடி படத்தை அரசு அலுவலகங்கள் மற்றும் திட்டங்களில் வைக்க வேண்டும் என மனுவும், பிரதமர் மோடி படத்தையும் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் சரவணன், “மத்திய அரசின் எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால் இத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவது போல விளம்பரங்கள் செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் திட்டங்களில் முதலமைச்சர் படத்துடன் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும். இதற்காக ஏற்கனவே அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆகவே கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும், இல்லையெனில் பாஜக சார்பில் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்” என கூறினார்.