கம்பத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஈத்கா மைதானத்தில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களுக்கு, கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் ரோட்டில், கம்பம் பள்ளத்தாக்கு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் பிஸ்கட், குளிர்பானம் வழங்கப்பட்டது. மத ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்த இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றது.
கம்பத்தில் ரம்ஜான் பண்டிகையொட்டி கம்பம் புதுப்பள்ளிவாசல், முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், டவுன் பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த முஸ்லீம்கள் வாவேர் பள்ளிவாசலுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஜமாத் தலைவர் ஜெய்னுல்ஆபிதீன் தலைமையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர்.

பின்னர் தொழுகையை முடித்து ஊர்வலமாக நடந்து சென்றனர். அப்போது ஊர்வலத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர்களுக்கு கம்பம் பள்ளதாக்கு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் தலைவர் முருகேசன், செயலாளர் முபாரக் பொருளாளர் சந்திரசேகர் , சிவனடியார் மட நிர்வாகி ராமகிருஷ்ணன் ஆகியோர் பிஸ்கட், குளிர்பானம் வழங்கினர்.
முன்னதாக ஜமாத் நிர்வாகிகள், இஸ்லாமிய பெரியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர். சமத்துவம், சகோதரத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் கம்பம் பள்ளதாக்கு தொழில் வர்த்தக சங்கம் நிர்வாகிகள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.