• Wed. Dec 11th, 2024

நவ.,29ல் வேளாண் சட்டங்கள் ரத்து செய்ய மசோதா தாக்கல் – மத்திய வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு

Byமதி

Nov 27, 2021

பார்லிமென்ட் துவங்கும் முதல்நாளான நவ.,29ல் வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று கொள்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். விவசாய சங்கங்கள் இதனை வரவேற்றிருந்தபோதிலும், உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு, குறைந்த பட்ச ஆதார விலையை உறுதி செய்வதற்கான மசோதா ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டம் தொடரும் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா, பார்லிமென்ட் துவங்கும் முதல் நாளில் தாக்கல் செய்யப்படும். பயிர் பல்வகைபடுத்துதல், ஜீரோ பட்ஜெட் விவசாயம், குறைந்த பட்ச ஆதார விலையை மேலும் வெளிப்படை தன்மை மிக்கதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவது குறித்து ஆராய குழு ஒன்றை அமைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இந்த குழு அமைக்கப்படுவதன் மூலம், விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கை நிறைவேறும். விவசாயிகள், பயிர்க்கழிவுகளை எரிப்பதை குற்றமாக கருத வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்று கொண்டுள்ளது. விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வருகிறது. அது குறித்து அவர்கள் முடிவு எடுப்பார்கள். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என அறிவித்த பிறகும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்வதில் எந்த காரணமும் இல்லை. உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக, மாநில அரசுகள், அவர்களின் கொள்கை முடிவுப்படி முடிவு எடுத்து கொள்ளலாம் என அவர் கூறினார்.

இந்நிலையில் விவசாய சங்கத்தினர் இன்று ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் நவ.,29ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த டிராக்டர் பேரணியை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் போராட்டத்தின் போது விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்வது எனவும் முடிவு செய்துள்ளனர்.

சம்யுக்த் விவசாய சங்க நிர்வாகிகள் கூறுகையில், போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் ரயில்வேக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து டிச.,4ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.