

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் ஊராட்சியைச் சேர்ந்த நாச்சியார்புரம் கிராமத்தில் நாடக மேடை அமைப்பதற்காக பூமி பூஜை போடப்பட்டது. நாச்சியார்புரம் கிராமத்தில் 2500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக கிராமத்தில் நாடக மேடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் பத்து லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்காக பூமி பூஜை போடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லோகிராஜன் தலைமை தாங்கினார் .ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் வரதராஜன் ,ஆணையாளர்கள் ஐயப்பன், திருப்பதி வாசகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அம்மா பேரவை தலைவர் விஜய் அனைவரையும் வரவேற்றார். முறைப்படி பூமி பூஜை போடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரெங்கசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, துணைத்தலைவர் ஜெயராமன், ஒப்பந்ததாரர்கள் மதியரசன், வேல்முருகன், மாவட்ட பிரதிநிதி கவிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

