புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு வழக்குகள் நடைபெற்று வந்தன.
அறந்தாங்கியில் தற்போது அபிநயா என்பவர் கோட்டாட்சியராகப் பணி புரிந்து வருகிறார் ,

இன்று அலுவலகத்தில் வழக்கம் போல் மேல்முறையீட்டு வழக்குகள் நடைபெற்றுக் கொண்டருந்தபோது, மேற்பனைக்காடு கிராமத்தைச்சேர்ந்த ஹபீப்முகம்மது, மற்றும் அப்துல்காதர், ஆகியோர் கோட்டாட்சியரைப் பார்த்து தகாதவார்த்தைகளில் பேசிவிட்டு… அவரது இருக்கையின் அருகே சென்று தாக்க முயற்சி செய்து அவரை பணிசெய்யவிடாமல் தடுத்து சத்தம் போட்டுள்ளனர்.
இச்சத்தத்தை கேட்ட அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட ஹபீப் முகமது மற்றும் அப்துல் காதரை விசாரணை அரங்கில் இருந்து வெளியே அப்புறப்படுத்தினர்.

மேலும் இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பவானி மற்றும் அலுவலக பணியாளர்கள் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இப்புகாரை பெற்றுக் கொண்ட காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாக இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஹபீப் முகமது மற்றும் அப்துல் காதரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

அதிகம் பேர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த பொழுது கோட்டாட்சியர் அபிநயாவை தரக்குறைவாக பேசித் தாக்குதல் நடத்த முயன்ற இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .








