• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொங்கல் பண்டிகையில் பீர் குடிக்கும் போட்டி..!

Byவிஷா

Jan 4, 2024

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பொங்கல் பண்டிகையின் போது பீர் குடிக்கும் போட்டி நடத்தப்பட உள்ளதாக பேனர் வைத்துள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து குடும்பமாக சேர்ந்து பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டு, பண்டிகையைக் கொண்டாடுவார்கள். அதன் பிறகு அந்தந்த கிராமங்களில் முன்னதாகவே ஏற்பாடு செய்துள்ள பொங்கல் விழா களைகட்டத் தொடங்கும். அதில் கபடி, பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்கு ஓட்டம், மியூசிக்கல் சேர், கிரிக்கெட், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படும்.
பல இடங்களில்,கரும்பு தின்னும் போட்டி, அளவில்லா சாப்பாடு சாப்பிடும் போட்டி என பல போட்டிகள் நடத்துவது வழக்கம். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பொங்கல் பண்டிகையின்போது பீர் குடிக்கும் போட்டி நடத்தப்பட உள்ளதாக பேனர் வைக்கப்பட்டுள்ளது.
வரும் 17-ம் தேதி காணும் பொங்கல் நாளில் பீர் குடிக்கும் போட்டி நடத்தப்படுவதாக பேனர் வைத்துள்ளனர். அந்த விளம்பர பேனரில், 10 பீர் குடித்தால் முதல் பரிசு ரூ.5,024, ஒன்பதரை பீர் குடித்தால் இரண்டாம் பரிசு ரூ.4,024, ஒன்பது பீர் குடித்தால் மூன்றாம் பரிசு ரூ.3,024 மற்றும் எட்டு பீர் குடித்தால் நான்காம் பரிசு ரூ.2,024 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் வாந்தி எடுத்தால் அல்லது துப்பினால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள். அத்துடன், அவர்கள் குடித்த பீருக்கான பணத்தையும் செலுத்திவிட்டு செல்ல வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பர பேனரை பார்த்து பொதுமக்கள் பலரும், ‘இதுக்கெல்லாமா போட்டி நடத்துவாங்க’, எதற்கும் ஒரு வரைமுறை என்பதை இல்லையா? என்று வேதனை தெரிவிக்கின்றனர்.