வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணங்கள் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி ஒரு வாடிக்கையாளர் வங்கி ஏடிஎம்களில் அனுமதிக்கப்பட்ட இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இதுவரை 20 ரூபாய் கட்டணம் பிடிக்கப்பட்டு வந்த நிலையில் இனி 21 ரூபாய் பிடிக்கப்படும்.
தற்போதைய விதிகளின்படி ஒருவர் தங்களது கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்களில் இருந்து ஒரு மாதத்தில் 5 பரிவர்த்தனைகளை இலவசமாக செய்துகொள்ளலாம். பிற வங்கி ஏடிஎம்கள் பயன்பாட்டை பொறுத்தவரை பெருநகரங்களில் 3 பரிவர்த்தனைகளயும், சிறு நகரங்களில் 5 பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளலாம்.
இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். வங்கி ஏடிஎம்களை பராமரிப்பதற்கு ஏற்படும் செலவுகள் அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு ஏடிஎம் கட்டணங்களை உயர்த்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.