கர்நாடகத்தில் வக்பு வாரியத்துக்கு தடை விதிக்கப்படுகிறதா என்பது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலளித்துள்ளார்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்த நிலையில் முதல்வராக பசவராஜ் பொம்மை செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் கர்நாடகத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஹிஜாப் தடை தொடர்பான பிரச்சனையை தொடர்ந்து இந்த பிரசாரங்களை இந்துத்துவ அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் ஹலால் கோவில்களில் முஸ்லிம்கள் கடை அமைக்க எதிர்ப்பு, ஹாலால் உணவு பிரச்சனைகள் எழுந்தன. மேலும் மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்தும் பிரச்சனையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் கர்நாடகத்தில் வக்பு வாரியத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறினார். இதற்கு சில அமைப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில், சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுபற்றி முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது: வக்பு வாரியம் தொடர்பான பேச்சு குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை. நீங்கள் சொல்லி தான் நான் அறிந்து கொண்டிருக்கிறேன். மாநிலத்தில் அவரவர் சம்பிரதாயத்தின்படி, அவரவர் நடந்து கொள்கிறார்கள். அரசு எப்போதும் சட்டத்தின்படியே நடக்கும். வக்பு வாரியத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்யப்படும் விவகாரத்திற்கும், அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் அரசின் முன் சமமானவர்கள் தான். இதில் வேறுபாடு பார்ப்பது இல்லை. மாநிலத்தில் மக்கள் அமைதியாக வாழ வேண்டும். சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். இது மட்டுமே அரசின் நோக்கம். அதை நிறைவேற்றும் நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது.இந்த வேளையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவின் பிட்காயின் விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ”பிட்காயின் விவகாரம் குறித்து ஏற்கனவே நான் சட்டசபை கூட்டத்தொடரிலேயே பதில் அளித்து விட்டேன். பிட்காயின் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு இருக்கும் தகவல், ஆதாரங்களை தாராளமாக வெளியிடலாம். எதை பேசினாலும் ஆதாரங்களை வெளியிட்டு அவர்கள் பேசட்டும். அரசியல் காரணங்களுக்காக பிட்காயின் குறித்து பேசுவதை அவர்கள் கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.