மக்களவைத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதில் அனைவருக்கும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது அதிமுகவுடன் கூட்டணியை பாமக உறுதி செய்திருப்பது பாஜக தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் முதற்கட்டமாக மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதிசெய்ய தீவிரம் காட்டி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணிக் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து இடங்களை அறிவித்து விட்டது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.
அதே நேரத்தில் இன்னும் தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக தங்களது கூட்டணியை இறுதி செய்யாமல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பாமக மற்றும் தேமுதிக இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவது தான் முக்கியாமாக பார்க்கப்படுகிறது. மேலும் பிரேமலதா மற்றும் அன்புமணி ஆகியோர் மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில் விடாப்பிடியாக உள்ளனர். ஆனால் அதிமுக மற்றும் பாஜக தரப்போ அதற்கு வாய்ப்பு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
பாமகவை பொறுத்தவரை ராமதாஸ் அதிமுக கூட்டணி அமைக்க விரும்பிய நிலையில், ஆனால் அன்புமணியோ பாஜக என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்ததால் கூட்டணியில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் திடீர் திருப்பமாக அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக எம்எல்ஏ அருள் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக நீடித்தது. அப்போது பாமக கேட்கும் 7 தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அதிமுக தரப்பில் கூறியதை அடுத்து கூட்டணி உறுதியாகி இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாமகவின் இந்த திடீர் முடிவு பாஜக தரப்பை அதிர்ச்சியடைய செய்துள்ளது.