

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்குவதற்கு இன்று பாலாலயம் பூஜையுடன் நடைபெற்றது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 6-ந் தேதி பூசம் நட்சத்தில் கோலாகலமாக மகா கும்பாபிஷேகம் நடந்தது.

தற்போது 12 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆகவே 12 ஆண்டுக்கு ஒரு முறை ஆகம விதிகளுக்கு உட்பட்டு மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேக நடத்திட திருக்கோவில் நிர்வாகம் முன் வந்துள்ளது. அதன் தொடக்கமாக பாலாலயம் நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று பாலாலயம் நடந்தது.


இதற்காக நேற்று காலையில் உற்சவர் சன்னதியில் விக்னேஷ்வர பூஜை, அநூக்ஞை பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து கோவிலுக்குள் திருவாட்சி மண்டபத்தில் கோவிலின் ஏழு நிலை ராஜகோபுரம், கோவர்த்தனாம்பிகை விமானம், மற்றும் வல்லபகணபதி விமானம் என்று 3 வேதிகை அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் 3 யாக குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மேள தாளங்கள் முழங்க நேற்று மாலையில் பூர்வாங்க பூஜைகள் நடந்தது. இதனையடுத்து 3 யாக குண்டத்தில் அக்னி வார்த்து முதல் காலயாகசாலை பூஜை நடந்தது.

இதற்கிடையில் பட்டுநூல், தர்ப்பைபுல் கொண்டு கோவிலில் 7 நிலைகொண்ட ராஜகோபுரத்தின் இருந்து சக்தியை கும்பத்தில் இருந்து பிம்பத்திற்கு இறக்கும் நிகழ்ச்சி நடந்தது இதே போல கோவர்த்தனாம்பிகை விமானம் மற்றும் வல்லப கணபதி விமானத்திலும் சக்தி கலையம் இறக்கும் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக கோவிலுகுள் பூஜை செய்யப்பட்ட குடம் புறப்பாடு நடந்தது.
இந்த நிலையில் இன்று (10-ந் தேதி) திங்கட்கிழமை காலையில் 2-ம் காலம் யாகசாலை பூஜை நடக்கிறது.பகல் 12 மணியில் இருந்து 12:15 மணிக்கு மலை உச்சியில் உள்ளகாசி விஸ்வநாதர் கோவில். மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோவில், சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில், கீழத்தெருவில் உள்ள குருநாதன் கோவில், மேல ரத வீதியில் உள்ள பாம்பலம்மன் கோவில்கள் உள்பட 6 உப கோவில்கள் திருப்பணிகள் செய்வதற்கு ஏற்பாடுகள் நடந்தது.


