• Fri. Apr 26th, 2024

இயற்கையை நேசிக்கும் காவல் துறை அதிகாரி..! பாராட்டிய அறிவுச்சுடர் அரிய முத்து அறக்கட்டளை..!

Byதரணி

Feb 4, 2023

இயற்கையையும், மரங்களையும் நேசிக்கும் அதிகாரியாக திகழும் நெல்லை மணிமுத்தாறு சிறப்பு காவல் படை கமாண்டன்ட் கார்த்திகேயனுக்கு அறிவுச்சுடர் அரிய முத்து அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
கடினமான காவல் பணிகளுக்கு இடையேயும் இயற்கையையும், மரங்களையும் நேசிக்கும் காவல்துறை அதிகாரிகள் தமிழக காவல்துறையில் ஆங்காங்கே சிலர் உள்ளனர். அந்த வரிசையில் இடம்பெற்று மரங்களையும், இயற்கையையும் நேசிக்கும் அதிகாரியாக வலம் வருகிறார் நெல்லை மணிமுத்தாறு சிறப்பு காவல் படை கமாண்டன்ட் கார்த்திகேயன். இவர் தனது பள்ளி, கல்லூரி நாட்களிலேயே இயற்கையையும், மரங்களையும் நேசித்து வளர்ந்தவர்.தான் பணி புரியும் அனைத்து இடங்களையும் பசுமையான சோலையாக மாற்றியவர். மேலும் மனிதநேயத்துடன் பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்கள் மத்தியில் இயற்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி மரங்களை வளர்த்து பாதுகாக்க அறிவுரை கூறி வருகிறார். மேலும் காவல்துறை மூலம் காணி குடியிருப்பு மக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவரது சிறப்பான காவல்துறை பணிக்காக கடந்த ஆண்டு ஜனாதிபதி பதக்கம் பெற்றுள்ளார்.இவரது பணிகளை கேள்வியுற்ற அறிவுச்சுடர் அரிய முத்து அறக்கட்டளை நிறுவனர் கல்வியாளர் முனைவர். குணசேகர் அரியமுத்து இவருக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி, மரக்கன்றுகளையும் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். இது குறித்து அறிவுச்சுடர் அரிய முத்து அறக்கட்டளை நிறுவன தலைவர் குணசேகர் அரியமுத்து கூறும் போது,
“நாம் வாழும் இந்த உலகை பசுமையாக பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. இதனை கருத்தில் கொண்டு அறிவுச்சுடர் அரிய முத்து அறக்கட்டளை பல்வேறு நிகழ்வுகளில் மரக்கன்றுகளை வழங்கி வருகிறது. எங்கள் அறக்கட்டளை மூலம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதைப்போல பசுமையை பேணும் ,
மரங்களை நேசிக்கும் பலரை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களை பாராட்டி வருகிறோம்.
நெல்லை மணிமுத்தாறு சிறப்பு காவல் படை கமாண்டன்ட் திரு. கார்த்திகேயன் அவர்கள் இயற்கை நேசிக்கும் ஒரு காவல்துறை அதிகாரி. அவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம் முடிந்த வரையில் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரிக்கும் வேலைகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்.மேலும் மனித நேயத்துடன் பல உதவிகளையும் செய்து வருகிறார்.இவரை அறிவுச்சுடர் அரியமுத்து அறக்கட்டளைசார்பில் மனதாரப் பாராட்டுகிறோம்” என்றார்.
நிகழ்வில் லயன்ஸ் கிளப் அருண் இளங்கோ, மணிமுத்தாறு சிறப்பு காவல் படை உதவி கமாண்டர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *