• Sun. Apr 28th, 2024

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நேரடி ஒளிபரப்பு..!

Byவிஷா

Jan 8, 2024

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை அந்தந்த ஊர்களில் இருந்து மக்கள் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் வருகிற 22-ம் தேதி கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடி உள்பட 6 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழாவை முன்னிறுத்தி அயோத்தியில் மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் பல நூறு கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்டு வருகின்றன. மூன்று அடுக்குகளுடன் உருவாகி இருக்கும் ராமர் கோவிலில் 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எண்கோண வடிவமைப்பு கொண்ட இந்த ஆலயத்துக்குள் செல்ல 44 நுழைவாயில்கள் இருக்கின்றன. உலகின் மிகப்பெரிய இந்து ஆலயம் என்ற சிறப்பை இந்த ஆலயம் பெற இருக்கிறது. இதை இந்திய மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்வதற்காக நேரடி ஒளிபரப்புக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 6 கோடி பேரை பாரதிய ஜனதா கட்சி தேர்வு செய்துள்ளது. அவர்கள் ஒவ்வொரு எம்.பி. தொகுதிகளிலும் உள்ள பூத் கமிட்டியினருடன் ஆலோசனை செய்து அயோத்தி நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடுகளை தொடங்கி உள்ளனர்.
அயோத்தியில் விழா நடைபெறும் அதே சமயத்தில் தங்கள் ஊர்களில் இருந்தபடியே கிராம மக்கள் அந்த விழாவை கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அகன்ற திரைகளில் அந்த நேரடி ஒளிபரப்பு காட்டப்படும். இதற்காக அகன்ற திரைகளை வாட கைக்கு எடுக்க பாரதிய ஜனதா மேலிடம் அறிவுறுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *