• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு

ByA.Tamilselvan

Apr 20, 2023

சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி, சிவகங்கை தொல்நடைக் குழு இணைந்து உலக மரபு நாள் விழாவை முன்னிட்டு நடத்திய ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் நாள் உலக மரபு நாளாக 1983ல் இருந்து யுனெஸ்கோ அறிவித்ததன் படி தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கவும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகிறது.

சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறையில் தொன்மை போற்றுதும் என்னும் பொருண்மையில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்க தொடக்க நிகழ்வில் கல்லூரி முதல்வர், முனைவர் கண்ணன் தலைமை தாங்கினார். வரலாற்றுத் துறைத் தலைவர் (பொறுப்பு) முனைவர் வெண்ணிலா வரவேற்புரைத்தார், சிவகங்கை தொல் நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா நோக்கவுரையாற்றினார்.அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி.பக்கிரிசாமி , சிவகங்கை தொல் நடைக் குழு செயற்குழு உறுப்பினர்கள் வித்யா கணபதி , சையது இப்ராகிம் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை தொல்லியல் அலுவலர் பா.ஆசைத்தம்பி தமிழக தொல்லியல் ஆய்வுகளின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் கருத்துரைக்கும் போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வரலாற்று தடயங்கள் மேற்பரப்பில் கேட்பாரற்று
அதன் முக்கியத்துவம் அறியாமல் சிதைந்து வருகிறது. கற்சிற்பம், கல்வெட்டு, பழமையான தொல்லியல் எச்சங்களை சில சமூக விரோதிகள் சீரழிவு ஏற்படுத்தி வருகின்றனர். வரலாற்று சின்னங்களை பாதுகாக்க மாணவர்கள் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சிறப்புரையாற்றினார்.

காலந்தோறும் தமிழகத்தில் கோவில் கட்டிடக்கலை என்னும் தலைப்பில் கருத்துரைத்த மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் முனைவர் கண்ணன் கோவில் கட்டுமானங்களில் காணப்படுகின்ற ஒவ்வொரு சிற்பத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். குறிப்பாக கோவில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம் ,கொடிமரம் மற்றும் கோவில் கோபுரம் கட்டமைப்பு முறை பற்றி மாணவர்களிடம் எடுத்து உரைத்தார் .கட்டமைப்பு முறை, கால கணிப்பு முறையும் அதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் து முனீஸ்வரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
நிகழ்விற்கு சிவகங்கை தொல்நடைக் குழுவின் பெருமைமிகு வழிகாட்டி தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் தலைவர் சுந்தர்ராஜன் ,செயலர் நரசிம்மன், உறுப்பினர் கள் ஆறுமுகம், சரவணன், இந்திரா, சிவகங்கை தமிழ் சங்கத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் காசி. ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு மகளிர் கலைக்கல்லூரி பேராசிரியர்கள் குமரமுருகன் ,சுரேஷ் ,அஸ்வத்தாமன், வாஹினி, ஜெயஈஸ்வரி ஏற்பாடு செய்தார்கள் உலக மரபு நாள் விழாவில் பங்கு பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவி கோகுல சுந்தரி நன்றி கூறினார்.