
தமிழில் முகவரியை எழுதி ஒரே நாளில் 15,000 அஞ்சல் அட்டைகளை சோழன் உலக சாதனை புத்தக அமைப்பு சார்பில் மதுரை தல்லாகுளம் தபால் நிலையத்தில் அனுப்பி வைத்து சோழன் உலக சாதனை படைத்துள்ளனர்.
தமிழில் பெறுநர் அனுப்புநர் என்று முகவரி எழுதி அனுப்பினாலே, அந்த அஞ்சல் அல்லது தூதஞ்சல் குறிப்பிட்ட எந்தவொரு முகவரிக்கும் சென்றடையக் கூடிய வாய்ப்பு இருந்தும் அது பற்றிய விழிப்புணர்வு அற்ற காரணத்தினால் அனைவரும் ஆங்கிலத்தில் முகவரிகளை எழுதி அனுப்புகிறார்கள். இது பற்றிய விழிப்புணர்வை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒரே நாளில் பெறுநர் அனுப்புநர் முகவரிகளை தமிழில் எழுதி 15,000 (பதினைந்தாயிரம்) அஞ்சல் அட்டைகளை தமிழ்நாட்டில் உள்ள 15,000 முகவரிகளுக்கு அனுப்பி சோழன் உலக சாதனை படைக்கும் நிகழ்வின் முதன்மை நிகழ்வு மதுரை தல்லாகுளம் அஞ்சல் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சோழன் உலக சாதனை புத்தக அமைப்பின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் தலைமையில் இந்த அஞ்சல் அலுவலகம் ஊடாக 1000 அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டது அதேவேளையில், தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக மீதமுள்ள 14,000 அஞ்சல் அட்டைகள் தமிழ்நாட்டின் முதலமைச்சர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆணையர்களுக்கும், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கும் அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டது
இந் நிகழ்சியில் மதுரை தல்லாகுளம் அஞ்சல் அலுவலகத்தின் முதுநிலை அஞ்சல் அலுவலர் தமிழ் குமரன் அவர்கள் அஞ்சல் அட்டைகளைப் பெற்று உலக சாதனை முயற்சியில் பங்கு கொண்டவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் சோழன் உலக சாதனை புத்தகம் பொதுச் செயலாளர் ஆர்த்திகா நிமலன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்களான மருத்துவர் ஆர்த்தி மருத்துவர் பாலாஜி மற்றும் தாய் மடி அறக்கட்டளையின் நிறுவனர் இந்து போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
பேட்டி நீலமேகம் நிமலன்
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர்
