• Tue. Apr 23rd, 2024

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்..!

Byவிஷா

Aug 17, 2022

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி மாதத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து வரும் 26ம் தேதி வெள்ளிக்கிழமையன்று தேரோட்டம் நடைபெறும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி மற்றும் மாசி மாத திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில் இந்தாண்டு ஆவணி திருவிழா இன்று அதிகாலை 5.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை கொடியேற்றத்தை முன்னிட்டு, கொடிப்பட்ட வீதியுலா நடைபெற்றது.
கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணியளவில் நடை திறக்கப்பட்டு, அபிஷேகம் மற்றும் தீபாராதணை நடைபெற்றது. அதிகாலை 4 மணியளவில் கொடிப்பட்டமானது விதியுலா வந்து, 5.40 மணியளவில் கோயில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு, அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து காலை 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் புறப்பட்டு திருவிதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் தந்தப் பல்லக்கில் திருவீதியுலா வரும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், 10 ஆம் நாளான வரும் 26-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 12-ம் திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *