ஆகஸ்ட் -1 முதல் 7 வரை உலக தாய்பால்வாரம்
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதின் மிக அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆக.1 முதல் 7ம் தேதி வரை தாய்பால்வாரம் கொண்டாடப்படுகிறது.
உலக தாய்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம்தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்-சேய் இருவருக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ‘உலக தாய்ப்பால் வாரம்’ அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு தாய்மார்கள் கொடுக்கும் உன்னத பரிசு தாய்ப்பால். பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப்பால் மட்டும் தான், குழந்தை பிறந்தவுடன் தாயிடம் இருந்து வெளிப்படும் பாலை ‘கொலஸ்ட்ரம்’ என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். புரோட்டீன், கொழுப்பு அதிகமுள்ள இந்த பால் தான் குழந்தைக்கு கொடுக்கக்கூடிய முதல் தடுப்பு மருந்து என்றும், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் இந்த பாலை கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தற்போதைய காலச்சுழற்சியில் வேலைக்கு செல்லும் பெண்களும் தாய்ப்பால் பாதுகாப்பான முறையில் எடுத்து வைத்து கொடுக்கும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. அதேபோல், தாய்மார்கள் பணிபுரியும் இடங்களிலும், பேருந்து உள்ளிட்ட பொது இடங்களில் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன. தாய்ப்பாலில் எல்லா வகையான ஊட்டச்சத்து, உயிர்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் முழுமையான உடல், மன வளர்ச்சிக்கு இது காரணமாகிறது. தாய்ப்பால் கொடுப்பது மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், நீரிழிவு, குழந்தை பெற்றெடுத்த பிறகு மனச்சோர்வுகள் போன்றவற்றிலிருந்து தாய்மார்களை பாதுகாக்கிறது. குழந்தை பேற்றுக்குப் பிறகு மாதவிடாய் ஏற்படுவதை, கருப்பையில் கருமுட்டை உருவாவதை தாமதப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரக்கிறது. அதனால், தாயின் கர்ப்பப்பை எளிதாகச் சுருங்கி ரத்தப்போக்கைக் குறைப்பதுடன், கர்ப்பப்பை மீண்டும் அதன் பழைய நிலையை அடைய உதவுகிறது. பதற்றம், மன அழுத்தம், எதிர்மறை மனநிலை, ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.