• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வரதட்சணை கேட்டு கொடுமை – பச்சிளம் குழந்தையுடன் தற்கொலைக்கு முயற்சி…

சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி திருமணம் செய்துள்ளார். இந்தநிலையில் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் 30 பவுன் வரதட்சணை கேட்டு நந்தினியை அடித்து துன்புறுத்தி கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் நந்தினி புகார் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதனிடையே நந்தினிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 7ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தையுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்க வந்த நந்தினி, திடீரென ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் டவுன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு பச்சிளம் குழந்தையுடன் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.